ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்தின் மின்படிக்கட்டுக் கைப்பிடிமீது 41 வயது ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்ததன் தொடர்பில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 10ஆம் தேதி இரவு 10 மணியளவில் நிலையத்தின் 3வது வெளியேற்ற வழியில் அமைந்துள்ள மின்படிக்கட்டின் கைப்பிடியை நோக்கி நடந்து சென்ற அந்த ஆடவர், அதன்மீது சிறுநீர் கழித்ததைத் தம் தோழி பார்த்ததாக ஸ்டெல்லா கீ என்பவர் மறுநாள் ஃபேஸ்புக் குழு ஒன்றில் பதிவிட்டார்.
கறுப்பு டி-சட்டை, சாம்பல் நிறக் கால்சட்டை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் கைப்பிடி அருகே நின்றிருந்த மூன்று நொடிக் காணொளி ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.
சம்பவத்தைப் பார்த்தவர்களில் ஒருவர், உடனே அருகிலிருந்த பயணிகள் சேவை மையத்திற்குச் சென்று புகார் அளித்ததாகவும் மற்றொருவர் ஆடவரைக் கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பவத்தைப் பார்த்த ஒருவர் அந்த ஆடவரை வழிமறித்தபோது, தன்னைச் சிலர் கண்காணிப்பதை உணர்ந்ததும் அவர் மின்தூக்கி மூலம் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார்.
அருகில் சென்று பார்த்ததில் மின்படிக்கட்டின் ஒட்டுமொத்த கைப்பிடிப் பகுதியிலும் சிறுநீர் இருந்ததாக ஸ்டெல்லா குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆடவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்குக் காவல்துறையினர் பதிலளித்தனர்.

