ஒரு பெண் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி $268,000க்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றினார் ஓர் ஆடவர்.
தேவேந்திரன் இளங்கோவன், 31, எனப்படும் அந்த சிங்கப்பூரருக்கான தண்டனை அக்டோபர் 23ஆம் தேதி விதிக்கப்பட உள்ளது.
முன்னதாக, $246,000 ஏமாற்றியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
‘கேரோசல்’ பொருள் விற்பனைத் தளத்தில் பிளேஸ்டேஷன் 4 (PS4) சாதனத்தை தாம் விற்பதாக 2021 ஜூலை 24ஆம் தேதி அறிவிப்பு கொடுத்த தேவேந்திரனை 25 வயதுப் பெண் ஒருவர் தொடர்புகொண்டு அந்தச் சாதனத்தை வாங்க விரும்பினார்.
முன்பணமாக $150, பிஎஸ் 4 சாதனம் விநியோகிக்கப்பட்ட பின்னர் $150 தரவேண்டும் என தேவேந்திரன் விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அன்றைய தினமே $150 அனுப்பினார் அந்த இளம்பெண்.
அதன் பின்னர் இருவரும் வாட்ஸ்அப் மூலமாக உரையாடினர். சாதனத்தை விநியோகிக்காமலேயே மேலும் $150 அனுப்புமாறு தேவேந்திரன் கூறியபடி அப்பெண்ணும் பணத்தை அனுப்பினார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், அந்தப் பெண்ணின் தாயார் மறைவைத் தொடர்ந்து காப்புறுதிப் பணமும் மசே நிதித் தொகையளிப்பும் அப்பெண்ணுக்கு வந்து சேர்ந்ததை ஆடவர் அறிந்துகொண்டார்.
சாதுர்யமாகப் பேசி 2021 ஆகஸ்ட்டுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் 48 முறை அந்தப் பெண்ணை ஏமாற்றி $246,000க்கும் மேல் தேவேந்திரன் பெற்றுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2021 டிசம்பர் 23ஆம் தேதிக்குள் அந்தப் பெண்ணிடம் இருந்த எல்லாப் பணமும் தம்மிடம் வந்து சேர்ந்துவிட்டதை அறிந்த பின்னரும் ஏமாற்றுவதை தேவேந்திரன் தொடர்ந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
2022 ஜனவரி 5ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் ஏறக்குறைய $22,000 பணத்தை ஒன்பது தடவைகளில் அந்தப் பெண்ணிடம் இருந்து தேவேந்திரன் பெற்றார்.
மொத்தம் 57 முறை அவர் அந்தப் பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் தமது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து $26,000 பணத்தை அந்தப் பெண் தேவேந்திரனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார்.
திடீரென தமது வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை மறைந்துவிட்டதை உணர்ந்த தந்தை, காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேவேந்திரனின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2023ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாண்டு ஜூன் வரை அவர் 104,000 வெள்ளியை அந்தப் பெண்ணிடம் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஏமாற்றிப் பணம் பறிக்கும் குற்றம் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

