பன்னாட்டு மோசடிக்காரர்களுடன் இணைந்து பல மில்லியன் லாபம் பார்த்த ஆடவர்

2 mins read
fd9b41f0-9872-4c13-9508-a957f16accb5
அனைத்துலகக் குற்றக் கும்பலுடன் இணைந்து உரிமம் பெறாத கடன்வழங்கும் நிலையங்கள் மூலமாக $5.2 மில்லியன்வரை லாபம் ஈட்டியதாக ஆடவர் ஒருவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். - கோப்புப் படம்

அனைத்துலகக் குற்றக் கும்பலுடன் இணைந்து அவர்களுக்காகப் பணியாற்றியதாகவும், அவ்வகையில் உரிமம் பெறாத கடன்வழங்கும் நிலையங்கள் மூலமாக $5.2 மில்லியன்வரை லாபம் ஈட்டியதாகாவும் ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளைச் சிங்கப்பூரரான டான் கெங் வீ, 49  ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட பன்னாட்டு மோசடிக் கும்பலுடன் இணைந்து ஆகஸ்ட் 2005 முதல் ஜூன் 2019 வரை $3 மில்லியன் முதல் $5.2 மில்லியன்வரை லாபம் ஈட்டிய உரிமம் பெறாத, கடன் வழங்கும் நிலையங்கள் பலவற்றை அவர் நிர்வகித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைக் களமாகக் கொண்டு இயங்கிவந்த அவர்,  2004 மற்றும் 2019க்கு இடையில் $1 மில்லியனுக்குமேல் லாபம் ஈட்டினார்.

2014 ஆம் ஆண்டில், அவர் சிங்கப்பூரில் $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு கூட்டுரிமை (காண்டோமினியம்) வீட்டை வாங்கியதும், அக்டோபர் 2016 முதல் மார்ச் 2025 வரை அதற்கான அடைமானத் தொகையைச் செலுத்த சட்டவிரோத வருமானத்தில் அவர் ஈட்டிய  $180,000க்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தினார் என்றும் தெரியவந்துள்ளது.

குற்றச் செயல்களில் கிடைத்த  வருமானத்தில் கணிசமான பகுதியைச் சீனாவில் சொத்துகளை வாங்கவும் அந்த ஆடவர் பயன்படுத்தியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

தற்போது காவலில் உள்ள டான், ஜனவரி 14ஆம் தேதி, சட்டவிரோதக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும், குற்றச்செயல்கள்வழி கிடைத்த பலன்களைக் கையாடியதாகச் சாட்டப்பட்ட ஒரு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

அவர், நவம்பர் 2003ல் அந்தக் குழுவின் பிரதிநிதியாகப் பணியாற்றத் தொடங்கியபோது சிங்கப்பூரில் இருந்ததாகவும் அக்காலத்தில் மாதம் $1,000 சம்பாதித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்