தன் தாயாரைத் தன்னுடைய தந்தை அடித்துத் துன்புறுத்துவதைப் பார்த்து வளர்ந்த சிறுமி, அதே தந்தை தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியபோது அதற்கு மறுப்பு தெரிவிக்க அஞ்சினார்.
ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில், 11 வயது நிரம்பிய அந்தச் சிறுமிக்கு அறிவுசார் குறைபாடு இருந்ததை அந்தத் தந்தை உணரவில்லை.
தற்போது 55 வயதுடைய அந்த ஆடவர், ஜனவரி 28ஆம் தேதி மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மூன்றுமே ஒருவரது மானத்திற்கு பங்கம் விளைவிப்பது தொடர்பானவை.
ஆடவரின் தண்டனை விதிப்பு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு, குற்றம் புரிந்தவரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்த ஆடவருக்கும் அவரின் முன்னாள் மனைவிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். நால்வரும் ஒரே படுக்கையறையில் நான்கு மெத்தைகளில் பக்கம் பக்கமாக உறங்குவது வழக்கம்.
அவ்வாறு, 2018ஆம் ஆண்டுக்கும் ஏப்ரல் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மனைவியும் மூத்த மகளும் உறங்கிய பின்னர் இளைய மகளது மெத்தைக்கு ஆடவர் சென்று பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டார்.
சிறுமி வளர்ப்புப் பெற்றோரிடம் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்படைக்கப்பட்ட பின்னரே, ஆடவரது குற்றங்கள் அம்பலமாகின.