சிங்கப்பூரில் 460 முறைக்குமேல் போலியான ‘கிராப்’ ரசீதுகளைத் தயாரித்து அவற்றைத் தமது நிறுவனத்துக்கு அனுப்பி அதனிடமிருந்து $16,400 பெற்றார் ஓர் ஆடவர்.
அதோடு, பொய்யான மருத்துவச் சான்றிதழ்களையும் சிங்கப்பூர் ஆயுதப் படையிடமிருந்து வந்தது போல ஒரு மின்னணுக் கடிதத்தையும் அவர் தயாரித்தார். சுகாதார அமைச்சில் தற்காலிகமாகப் பணியாற்றிய அவர், அதனைக் காரணமாகப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லாமல் இருந்தார்.
முகம்மது ஃபாரிஸ் ஷேக் ஷா மரிக்கான், 33, பொய்யான ஆவணங்களைத் தயாரித்ததாகத் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) ஒப்புக்கொண்டார்.
அதுபோன்ற மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஃபாரிஸ், ‘பெர்சொல்கேல்லி’ எனும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்நிறுவனம் மனிதவளத்தை வழங்க, சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றியது.
கொவிட்-19 தொடர்பான அமைச்சின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க, சுகாதார அமைச்சில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிய, ஃபாரிஸ் 2021ஆம் ஆண்டு நவம்பரில் ‘பெர்சொல்கேல்லி’ நிறுவனத்தால் வேலைக்கு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்புத் துணை வழக்கறிஞர் கேல்லி இங் கூறினார்.
சென்ற ஆண்டு ஏப்ரலில் அவரை நிரந்தர ஊழியராக மாற்ற அமைச்சு முடிவுசெய்தபோது, அவரின் எஞ்சிய வருடாந்தர விடுப்பை அமைச்சு கண்டது.
“அப்போதுதான் கடந்த சில மாதங்களாக நேரக் குறிப்புத்தாள்களிலும் போக்குவரத்து ரசீதுகளிலும் முரண்பாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று வழக்கறிஞர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனமும் அமைச்சும் காவல்துறையில் புகார் செய்தன. ஃபாரிஸ் போலியான ‘கிராப்’ ரசீதுகளைத் தயாரித்தது விசாரணைகளில் தெரியவந்தது.
அவர் போலியான ரசீதுகளை நிறுவனத்திடம் கொடுத்து, அதனிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
தம்மீது விசாரணை நடத்தப்படுவதை அறிந்த ஃபாரிஸ், சென்ற ஆண்டு மே மாதம் அமைச்சிடம் எழுதிய கடிதத்தில், தாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
அதற்கு மறுமாதம் அவர் பதவி விலகினார். அதே ஆண்டு ஜூலையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
வழக்கு விசாரனை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.