சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க நிறுவன வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது புதன்கிழமை (மே 13) குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.
அந்த 42 வயது ஆடவர் திறந்த வங்கிக் கணக்குகளில் $800,000க்கும் அதிகமான பணம் போடப்பட்டது.
ஆடவர், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அமைத்த நிறுவனத்துக்காகத் தொடங்கிய வங்கிக் கணக்குகளில் $32,778யும் $802,000யும் போடப்பட்டன. அந்தத் தொகை மோசடி மூலம் வந்ததாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூருக்குள்ளும் சிங்கப்பூருக்கும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு மோசடிகள், வர்த்தக மின்னஞ்சல் மோசடிகள் ஆகியவை மூலம் அந்தப் பணம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்படவிருக்கும் ஆடவரை நிறுவனத்தை அமைத்து வங்கிக் கணக்குகளைத் தொடங்கும்படி அறிமுகம் இல்லாத தனிநபர்களால் பணிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வங்கிக் கணக்குகளின் தனிப்பட்ட விவரங்களையும் அறிமுகம் இல்லாத தனிநபர்களிடம் ஆடவர் வழங்கினார்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆடவர் கவனிக்கத் தவறினார் என்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை ஆடவர் தன்வசம் வைத்திருக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவனம் ஒன்றைத் தொடங்கும்படியும் வங்கிக் கணக்குகளைத் திறக்கும்படியும் வரும் ஆலோசனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை மீண்டும் எச்சரித்தது.

