சிங்கப்பூரில் வாழும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர் தென்கொரியாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய $1.5 பில்லியனுக்கும் மேலாக பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பணம் அவருக்கு 2014ஆம் ஆண்டுகக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிம் தெய்க் ஹூன் என்ற அந்த 63 வயது ஆடவர் அந்தப் பணத்தைக் கொண்டு ஒவ்வொன்றும் 1கிலோகிராம் எடையுள்ள கிட்டத்தட்ட 28,000 தங்கக் கட்டிகளை வாங்கியதாக நம்பப்படுகிறது.
அத்துடன், பணம் பெற்ற அந்தக் காலகட்டத்தில் அவர் சிங்கப்பூர் சுங்கத் துறையையும் மூன்று தளவாட நிறுவனங்களையும் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தத் தளவாட நிறுவனங்கள் மூலம் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அனுப்பிய கப்பல் சரக்குகளில் காற்றைக் கொண்டு இயக்கும் கருவிகளே உள்ளன என்று அவர் பொய்யுரைத்தார்.
உண்மையில், அவற்றில் 23,000 தங்கக் கட்டிகள் இருந்தன.
இவர் மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) அன்று ஏமாற்றுதல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட காவல்துறையினர், வர்த்தக விவகாரங்கள் பிரிவுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திரு கிம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
புலன் விசாரணையில் திரு கிம் 2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தென்கொரியாவில் இருந்தும் ஜப்பானில் இருந்தும் பணம் கள்ளத்தனமாகக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி $20,000க்கும் மேற்பட்ட ரொக்கப் பணம் அல்லது காசோலை போன்ற பணமாக மாற்றிப் பெறக்கூடிய பத்திரத்தையோ வெளிப்படையாகத் தெரிவிக்காமல் சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதோ, இங்கிருந்து எடுத்துச் செல்வதோ குற்றமாகும்.