சொத்து முகவை உரிமையாளர் ஒருவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி மது அருந்திவிட்டு காரை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அன்று, இரவு 9.40 மணி அளவில் ‘டபிள்யூஆர்ஜே & அசோசியேட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த வில்லியம் டெங் குவான் ஹாவ், 62, சிலேத்தார் கன்ட்ரி கிளப் நீச்சல் குளத்திற்குள் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
மது அருந்திவிட்டு காரை ஓட்டியதாக ஒரு குற்றச்சாட்டும், கவனக்குறைவான முறையில் காரை ஓட்டி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவித்தாக மற்றொரு குற்றச்சாட்டும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) டெங் மீது சுமத்தப்பட்டன.
டெங்கின் வழக்கு டிசம்பர் 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் தொடர்பில், முதல் முறை குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அக்குற்றத்தைப் புரிவோருக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.