விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்; காரோட்டி கைது

2 mins read
2fd423cf-c5d1-4e20-a78b-eb7edc5bc612
விபத்து நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளிப் படம். - படம்: MALAYSIA-SINGAPORE BORDER CROSSERS (MSBC)/ஃபேஸ்புக்

லோயாங்கில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

லோயாங் வே, லோயாங் லேன் சந்திப்பில் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்திருப்பதாக காலை 6.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

சம்பவ இடத்திலேயே 31 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உதவி மருத்துவர் குழு தெரிவித்தது.

மரணம் விளைவிக்கும் அளவுக்குக் கவனம் குறைவாக கார் ஓட்டிய குற்றத்துக்காக 55 வயது காரோட்டி கைது செய்யப்பட்டார்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையின் நீலநிறக் கூடாரம் இருப்பதையும் அருகில் பலத்த சேதமடைந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கிடப்பதையும் விபத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட காணொளி காட்டியது.

நொறுங்கிய மோட்டார் சைக்கிளின் பாகங்கள் சாலையில் சிதறிக் கிடந்ததையும் பல்வேறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளியில் காணமுடிந்தது.

மோட்டார் சைக்கிளின் பதிவெண் தகட்டில் வெளிநாட்டு எண் இருந்தது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையின் வேன் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இருப்பதையும் நடுத்தர வயதுடைய ஆடவர் ஒருவருடன் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசிக்கொண்டு இருந்ததையும் மற்றொரு காணொளி காட்டியது.

விபத்து காரணமாக பல்வேறு பேருந்து சேவைகள் தாமதம் அடைந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் காலை 9.35 மணியளவில் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. பின்னர், சேவைகள் அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக காலை 10.45 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்ட மற்றொரு பதிவு கூறியது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்கைது