உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 49 வயது ஆடவர் ஒருவர் கைதானார். அவரிடம் செல்லுபடியாகக்கூடிய அடையாள ஆவணங்களோ பயண ஆவணங்களோ இல்லை.
நாட்டைவிட்டு வெளியேறும் வழித்தடத்தில் தவறாக வந்துவிட்டதாகவும் சிங்கப்பூரைவிட்டு வெளியேறும் எண்ணம் தம்மிடம் இல்லை என்றும் அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் முதலாவது நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், சிங்கப்பூரரான அந்த வாகன ஓட்டுநரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் பொய்யான அடையாளங்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 19ஆம் தேதி அதிகாலை நேரத்தில் அந்த நபர் ஓட்டி வந்த சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கார், புறப்பாட்டு வாகனக் கூடத்தின் குடிநுழைவு அனுமதி தடத்தில் நுழைந்தது.
அந்த ஓட்டுநரின் உடலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் மூன்று ஆவி பிடிக்கும் சாதனங்களும் கத்தி ஒன்றும் இருந்ததை அவர்கள் கண்டனர்.
$52,000 மதிப்புள்ள சுமார் 322 கிராம் ஐஸ், 28 கிராம் ஹெராயின் போதைப்பொருள் அவரின் வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
மூன்று சமையலறை கத்திகளையும் வேதிபொருள் ஆவியாக்கும் சாதனத்தில் நிரப்பப்படும் திரவமும் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
அந்த ஆடவர் கைதானார். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலன்விசாரணை நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் மிக முன்னுரிமைச் செயல். சோதனைச் சாவடிகளில் அமலாக்க அமைப்புகளுடன் சேர்ந்து ஆணையம் தொடர்ந்து செயல்படும்.