காற்பந்தாட்டம் முடிந்து பெற்றோரைத் தாக்கிய ஆடவர் கைது

1 mins read
0de8a497-f377-4985-bfa9-6463fb3f1057
மே 11ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலை அடுத்து கண்ணில் காயமடைந்தார் திரு டேனியல் டே. - படம்: திரு டேனியல் டே

சிங்கப்பூர் இளையர் லீக் காற்பந்தாட்டப் போட்டிக்குப் பின் பெற்றோர் ஒருவரைத் தாக்கியதற்காக 46 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அல்பிரெக்ஸ் அணிக்கும் கேலாங் இன்டர்நேஷனல் அணிக்கும் இடையிலான காற்பந்து ஆட்டத்துக்குப் பின் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடந்தது.

செங்காங் உயர்நிலைப் பள்ளியில் 14 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்களுக்கான ஆட்டம் முடிந்து வளாகத்திலிருந்து அணிகள் வெளியேறியபோது ஆடவர் பெற்றோரைத் தாக்கியதாக சிங்கப்பூர் இளையர் லீக் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

கற்பாந்தாட்டம் முடிந்து பெற்றோரை ஆடவர் மடக்கக்கூடிய இரும்பு நாற்காலியால் தாக்கியதாக அல்பிரெக்ஸ் சொன்னது. அதன் விளைவாக பெற்றோரின் இடது கண்ணுக்கு அருகில் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இளம் காற்பந்தாட்ட விளையாட்டாளரின் பெற்றோரான அந்த 51 வயது ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் அதே இரவு வீடு திரும்பினார்.

“பெற்றோருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அவர் குணமடைந்துவருகிறார், பார்வையும் மேம்பட்டுவருகிறது. தாக்குதல் நடந்த பிறகு காவல்துறையிடம் உடனடியாக அவர் புகாரளித்தார்,” என்றும் அல்பிரெக்ஸ் ஃபேஸ்புக்கில் சொன்னது.

காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

சம்பவத்துக்கு முன் நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் கேலாங் அணி எட்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அல்பிரெக்ஸ் அணியை வென்றது.

விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர், ஆதரவாளர்கள் ஆகியோர்மீதான எவ்வித வன்முறை நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிப்பதாக அல்பிரெக்ஸ் அணி சொன்னது.

குறிப்புச் சொற்கள்