அமலாக்க நடவடிக்கையின்போது அதிகாரிகளைத் தாக்கிய ஆடவர் கைது

அமலாக்க நடவடிக்கையின்போது அதிகாரிகளைத் தாக்கிய ஆடவர் கைது

அங் மோ கியோவில் நிகழ்ந்த சம்பவம்
படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம்

12 Oct 2026 - 5:29 pm

1 mins read

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் நடமாட்டச் சாதன அமலாக்க அதிகாரிகளைத் (ஏஎம்இஓ) தாக்கியதற்காக 52 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டார். அச்சம்பவம் அங் மோ கியோ வட்டாரத்தில் நிகழ்ந்தது.

சம்பவத்தில் ஆடவர் ஒருவர் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 12) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. அரசாங்க ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

“எங்களின் அதிகாரிகள் துன்புறத்தப்படுவதையோ அவர்களிடம் வன்முறையில் ஈடுபடுவதையோ நிலப் போக்குவரத்து ஆணையம் அறவே சகித்துக்கொள்ளாது. அத்தகைய சம்பவங்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் காவல்துறையுடன் அணுக்கமாகச் செயல்படுகிறோம்,” என்று ஆணையம் எச்சரித்தது.

“அமலாக்கச் சோதனைகளின்போது எங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க நடந்துகொள்ளுமாறும் நாங்கள் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம்,” என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

ஏ‌ஷியாஒன் ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, அந்த ஆடவர் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்தது. இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே, செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் மொத்தம் 503 குற்றங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 70 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காவல்துறைநிலப் போக்குவரத்து ஆணையம்கைதுபறிமுதல்