உட்லண்ட்ஸ் பகுதியில் வானில் பறந்து திரிந்த பறவைக் கூட்டத்தை விரட்டும் எண்ணத்தோடு ஓர் எறிபொறியில் (கவண்) கோலிக் குண்டுகளை வைத்து அவற்றை ஆடவர் தாக்கினார்.
ஆனால், அந்த கோலிக்குண்டுகளில் ஒன்று அருகில் இருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் கண்ணாடியைப் பதம் பார்த்தது.
வீட்டுக் கண்ணாடியை உடைத்த சந்தேகத்தின்பேரில் அந்த 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது பொறுப்பற்ற செயலைப் புரிந்த குற்றம் சுமத்தப்படும்.
ஜூலை 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் ரிங் ரோடு புளோக் 646 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறை கண்ணாடி சேதமடைந்தது குறித்து தகவல் கிடைத்தாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிக்கை வெளியிட்டது.
ஏதோ ஒரு பொருள் அதனைத் தாக்கி கண்ணாடி உடைந்ததாக நம்பப்பட்டது என்று காவல்துறை குறிப்பிட்டது.
காவல்துறை விசாரணை
உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கோலிக்குண்டுகளைக் கொண்டு எறிபொறியில் அவற்றை வைத்து பறவைகளைக் குறிவைத்துத் தாக்கியது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய எறிபொறியும் கோலிக்குண்டுகளும் சிறு கற்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்மீது நீதிமன்றத்தில் திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆறுமாத சிறை, $2,500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

