கிளமெண்டி வங்கியில் $10,000 போலி பணத்தாளைச் செலுத்த முயன்ற ஆடவர் கைது

1 mins read
eb1a5af1-45e9-47a4-926c-dab6961cc38f
அந்தப் போலிப் பணத்தாளைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

கிளமெண்டி வட்டார வங்கியில் போலியான $10,000 பணத்தாளைச் செலுத்த முயன்ற ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் அந்த 22 வயது ஆடவர் அவ்வாறு செய்ததாகக் காவல்துறை புதன்கிழமை (செப்டம்பர் 3) தெரிவித்தது.

நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவர்மீது குற்றம் சாட்டப்படும்.

சம்பவத்தன்று வங்கி ஊழியரிடம் அந்தப் பணத்தாளைக் கொடுத்த ஆடவர் அதை வங்கிக் கணக்கு ஒன்றில் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அது போலியான பணத்தாள் என்று சந்தேகித்த வங்கி ஊழியர் அதுபற்றி மேலாளரிடம் தெரிவித்தார். பின்னர் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவரைக் கைதுசெய்ததுடன் அந்தப் பணத்தாளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

போலிப் பணத்தாள் விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் காவல்துறை கூறியது.

போலியான பணத்தாளை யாரிடமிருந்தாவது பெற்றுக்கொண்டதாகச் சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிங்கப்பூர்ப் பணத்தாளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த மேல்விவரங்களுக்குச் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இணையப் பக்கத்தை நாடலாம் என்று காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்