மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 43 வயது ஆடவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 30ஆம் தேதி இரவு ஜாலான் சுல்தானில் ஆடவர் விபத்தை ஏற்படுத்தினார்.
ஜலான் சுல்தான், ரோச்சர் கேனல் சாலை சந்திப்பில் விபத்து ஒன்று நடந்ததாக தங்களுக்கு இரவு 11.50 மணிக்குத் தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கார் கவிழ்ந்து கிடந்ததைக் கண்டனர். பிறகு, மதுபோதையில் இருந்தக் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் கார் சாலையோரத்தில் உள்ள புல்வெளியில் சாய்ந்து கிடந்தது.
மேலும், சாலையிலிருந்த போக்குவரத்து விளக்குக் கம்பமும் விபத்தில் சேதமடைந்திருந்ததைக் காணமுடிந்தது. காரின் உடைந்த பாகங்கள் சாலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததையும் காணொளியில் பார்க்க முடிந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.