ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளியில் காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விட்டவர் கைது

2 mins read
426032d6-bfd6-45fb-84a7-6ab952f3146a
வலது படத்தில் ஒருவரை காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். இடது படத்தில் அவரை நான்கு அதிகாரிகள் தரையில் கிடத்திப் பிடிக்கின்றனர். - படங்கள்: XIAOHONGSHU

ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளிக்கு வந்த ஒருவர், அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளுக்குப் பணியாமல் சவால் விட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அவர் பள்ளியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு விவரம் கேட்டபோது, அன்று மாலை 4.20 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது. பள்ளி முதல்வர் சோய் வாய் யின் பெற்றோருக்கு எழுதிய குறிப்பில், ஊழியர்களும் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் குறிப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. பொது அலுவலகத்துக்கு வந்த ஒருவர், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் நிலைமையைச் சமாளிக்க காவல்துறையுடன் ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதாகவும் முதல்வர் கூறினார். அந்த 33 வயது நபரிடம் தனிப்பட்ட விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொண்டபோது அவற்றை வழங்குவதற்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் காவல்துறை கூறியது. அவர், குரலை உயர்த்தி காவல்துறை அதிகாரிகளை நோக்கி சத்தமிட்டதாகவும் சவால் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரை பல முறை அதிகாரிகள் எச்சரித்தனர். உத்தரவுகளை மதிக்காத அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சீன ஆசிரியர் ஒருவரைத் தேடி அவர் பள்ளிக்கு வந்ததாக சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவின் தகவல் தெரிவிக்கிறது. ஆனால், அவர் பள்ளியை விட்டுச் செல்ல மறுத்ததால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட படங்களில் வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்துச் செல்வது தெரிகிறது. மற்றொரு படத்தில் அந்த நபரை நான்கு அதிகாரிகள் தரையில் கிடத்திப் பிடிப்பதைக் காணமுடிகிறது. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்