புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் தொடர்பில் 26 வயது ஆடவரை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) கைதுசெய்துள்ளனர்.
டிசம்பர் 21ஆம் தேதி காலை 7 மணியளவில் தேவாலயத்தில் உள்ள மர்மப் பொருள் குறித்துத் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட ஆடவர் அந்த தேவாலயத்தின் தொண்டூழியராவார். தேவாலய வளாகத்தில் உள்ள கால்வாயில் சந்தேகத்திற்குரிய பொருளைத் தான் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
அதையடுத்து, சந்தேகத்திற்குரிய பொருளை வைத்திருந்த ஆடவர், எப்படி அதைக் கண்டுபிடித்தார் என்பது பற்றிய விவரங்களைத் தரவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தேவாலயத்தைவிட்டு அனைவரையும் அதிகாரிகள் வெளியேற்றியதுடன் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியக்கவியல், வெடிகுண்டுப் பாதுகாப்புக் குழு சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
தீவிரமான சோதனைகளுக்குப் பிறகு வெடிகுண்டைப் போல தோற்றமளித்த சந்தேகத்திற்குரிய பொருள் காலை 10.40 மணியளவில் ஆபத்தானதன்று அல்ல என்பதை உறுதிப்படுத்தினர்.
மூன்று அட்டைப்பெட்டிச் சுருள்களையும் கறுப்புப் பசைப்பட்டை சுற்றிய கம்பிகளையும் கொண்டு அந்தப் பொருள் உருவாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து மர்மப் பொருள் நீக்கப்பட்டதை அடுத்து மாலை 5 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 வயது ஆடவர், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின்கீழ் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
காலை 8.30 மணியளவில் சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காவல்துறை, பொதுமக்கள் அந்த வட்டாரத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியது.
தேவாலயத்தின் அனைத்துப் பிரார்த்தனைக் கூட்டங்களும் டிசம்பர் 21ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதாகத் தேவாலயத்தின் அருள்திரு கிறிஸ்தஃபர் லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பிரார்த்தனைக் கூட்டங்கள் அனைத்தும் டிசம்பர் 22ஆம் தேதி வழக்கம்போலத் தொடரும் என்றும் பின்னர் அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின்போது தேவாலய அங்கத்தினர் பிற தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி அருள்திரு லீ கேட்டுக்கொண்டார்.
வெளியுறவு அமைச்சரும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சம்பவத்தைச் சரிவரக் கையாண்ட சிங்கப்பூர்க் காவல்துறைக்கு ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்தார்.
“மர்மப் பொருள் ஆபத்தானதன்று என்பது நிம்மதியளிக்கிறது. தீவிரமான விசாரணை தொடரும் வேளையில் வதந்திகளைப் பரப்பவேண்டாம்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது கத்தியால் தாக்கப்பட்ட அருள்திரு கிறிஸ்தஃபர் லீயையும் நேரில் சந்தித்தாக டாக்டர் விவியன் கூறினார்.
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம், மர்மப் பொருளை வெடிகுண்டாக யாரோ சித்திரிக்க முற்பட்டதாகக் கூறினார்.
கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, சிங்கப்பூரின் பல்லின, பல சமய சமூகம் மிகவும் விலைமதிப்பற்றது என்றும் அதை உறுதியுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதே கருத்தை முன்வைத்த கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.

