பொங்கோல் வட்டாரத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை நிகழ்ந்த விபத்து தொடர்பில் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
பொங்கோல் வேயில் கார் விபத்து நிகழ்ந்திருப்பதாகக் காலை 6.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் காவல்துறையினர் வருவதற்குள் கார் ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அது தெரிவித்தது.
காருக்குள் மின் சிகரெட்டுகளும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் என நம்பப்படும் பொருள்களும் இருந்ததாகக் கூறிய காவல்துறை, கார் ஓட்டுநர் பின்னர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
காரின் முன்பக்கம் பலத்த சேதமுற்று இருந்ததையும் வலது சக்கரம் கழன்று கிடப்பதையும் சாவ்பாவ் செய்தித்தாள் வெளியிட்ட படத்தில் காணமுடிந்தது.
அந்தச் சம்பவத்தில் நிகழ்ந்த போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் பற்றி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடமும் மின்சிகரெட் குற்றம் குறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடமும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
விசாரணை நீடிக்கிறது.