சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் முனையத்தில் (குரூஸ் சென்டர்) பயணம் மேற்கொள்ளவிருந்த 50 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் அக்டோபர் 17ஆம் தேதி சோதனைகளின் போது கைதுசெய்யப்பட்டார்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 6) அதன் ஃபேஸ்புக் பதிவில் இதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆடவரின் பொருள்கள் சோதனைக் கருவிகளில் கவனிக்கப்பட்டபோது, அவை சந்தேகத்துக்குரியனவாக இருந்தன. எனவே அவர் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
மிகவும் பதற்றமாக நடந்துகொண்ட அவரிடம் போதைப்பொருளும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுநீர்ச் சோதனையில் ‘மெத்தபட்டமின்’ போதைப்பொருளை அவர் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டு சம்பவம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு (சிஎன்பி) மாற்றப்பட்டது. போதை ஒழிப்புப் பிரிவினரால் மேலும் பல தடைசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள்கள் ஆடவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.
பிறகு அவரது வீட்டைச் சோதனையிட்டதில் எரிமின் மாத்திரைகள், 3.78கிராம் ஐஸ், மின்சிகரெட், கேபோட் சாதனங்கள் போன்ற பல பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆடவரின் கைது உறுதியாகி விசாரணை தொடர்கிறது என்று சிஎன்பி தெரிவித்துள்ளது.

