காக்கி புக்கிட் தொழிற்பேட்டையில் சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் ஆடவர் ஒருவர் கத்தியுடன் மிரட்டிய குற்றத்துக்காகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த 33 வயது ஆடவர் எண் 25, காக்கி புக்கிட் ரோடு 4ல் முதல்தளத்தில் செயல்படும் ஒரு கார் பழுதுபார்க்கும் கடைக்கு வெளியே மதியம் 12.30 மணியளவில் குற்றவியல் மிரட்டல் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியில் அவசரகால சிறப்புக் காவல்படையைச் (ERT) சேர்ந்த நான்கு அதிகாரிகள் அக்கடைக்கு வெளியே அந்த ஆடவரைச் சூழ்ந்து நிற்பதைக் காணமுடிந்தது.
சிறிது தூரத்தில் மேலும் இரு காவல்துறையினர் தயார் நிலையில் இருப்பதும் தெரிந்தது.
அவசரகால சிறப்புக் காவல்படையினர் மிகவும் அபாயகரமான சம்பவங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். அவர்களிடம் 17 கிலோகிராம் எடையுள்ள உபகரணங்களும் ஆயுதங்களும் எப்போதும் உடன் இருக்கும்.
கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த ஆடவர் பாதி விரல்களை மறைக்கும் கையுறையுடன் சிகரெட் ஒன்றை இடது கையில் வைத்திருந்தார்.
ஒரு பையைத் தரையில் வைத்துவிட்டு, அவரது சட்டைப் பைகளில் இருந்தவற்றை வெளியில் எடுப்பதும் காணொளியில் காணப்பட்டது.
ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, குற்றவியல் மிரட்டல் விடுத்ததற்காக ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறியது.
ஆடவரிடம் கத்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

