பொத்தோங் பாசிரில் உள்ள வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பொருள்களையும் வைத்திருந்ததன் தொடர்பில் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிலிருந்து வெடிபொருள்களைப் பயன்படுத்தியதற்காகக் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அவர் பிடிபட்டார்.
காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் உள்ள ஒரு வீட்டிலிருந்து யாரோ வெடிபொருள்களைப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல்துறையின் அங் மோ கியோ பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பலவகைத் துப்பாக்கிகள், வில்-அம்புகள், கவண்கள், கத்திகள், மின்னதிர்வு உண்டாக்கும் கருவி போன்றவற்றுடன் முப்பரிமாண அச்சிடு கருவியையும் அதற்குப் பயன்படும் அச்சுப்பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த ஆடவர்மீது புதன்கிழமை, அரித்தழிக்கும், வெடிபொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் (Corrosive and Explosive Substances and Offensive Weapons Act) குற்றம் சாட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் அறவே பொறுத்துக்கொள்ளப்படமாட்டா என்று காவல்துறை குறிப்பிட்டது.

