புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 4ல் உள்ள ஒரு வெற்றுத் தளத்தில் உள்ள பூனை இருப்பிடங்களுக்குத் தீ வைத்ததாகக் கூறப்படும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புக்கிட் பாத்தோக் கிழக்கு அவென்யூ 4, புளோக் 263ல் நிகழ்ந்த தீ விபத்து குறித்து நவம்பர் 19 அன்று அதிகாலை 1.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் தீ வைத்து விபத்தை ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 20) அன்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தீப்பிடித்ததில் புளோக்கின் வெற்றுத் தளத்தில் தீயால் எரியக்கூடிய பொருள்கள் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
தண்ணீரைப் பீய்ச்சி தீ அணைக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர், அங்குள்ள பூனைகளுக்கு அதிர்ஷ்டவசமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் விசாரணை நடத்தி வருகின்றன.

