சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மொய்ப்பணப் பெட்டியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 38 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை (அக்டோபர் 20) குற்றம் சுமத்தப்படவுள்ளது.
பீச் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த திருட்டுச் சம்பவம் குறித்து அக்டோபர் 17ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
திருமண வரவேற்பின்போது, ஏறத்தாழ $2,000 ரொக்கம் இருந்த சிவப்பு அன்பளிப்பு உறைகள் அடங்கிய பெட்டியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்துச் சென்றதாக அது குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆடவரைக் கண்டறிந்து அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
“பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். முக்கியமாக, கொண்டாட்டங்கள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் தங்களின் விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்,” என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2026 முற்பாதியில் வசிப்பிடங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் 730ஆகச் சற்று அதிகரித்துள்ளன. 2025ஆம் ஆண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 726ஆக இருந்தது. இந்த விவரங்கள், ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான, காவல்துறையின் அரையாண்டுக் குற்றச் சம்பவப் புள்ளிவிவர அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
