இணையத்தில் போலியான பொருள்களை விற்பனை செய்த சந்தேகத்தின்பேரில் 46 வயது ஆடவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
புக்கிட் மேரா, டெல்டா அவென்யூவில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அந்த ஆடவர் பிடிபட்டார். சோதனையில் 4,700க்கும் அதிகமான போலியான பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பைகள், அழகுசாதனப் பொருள்கள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் எனப் பலவும் அவற்றில் அடங்கும். அவற்றின் சந்தை மதிப்பு 141,000 வெள்ளிக்கு மேல் என்று கூறப்படுகிறது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
போலியான பொருள்கள்மீது முன்னணி நிறுவனங்களின் பெயரை அச்சிட்டு விற்பனை செய்தால் 100,000 வெள்ளிவரை அபராதம், ஐந்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

