பிடோக் நார்த் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் அருகே ரம்பத்தைச் சுழற்றியதாகக் கூறப்பட்ட 55 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள புளோக் 539க்கு அருகில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) பிற்பகல் 3.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பலமுறை எச்சரித்தும் ரம்பத்தைக் கீழே போட மறுத்த ஆடவர், தொடர்ந்து கூச்சலிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆடவரின் செயலைத் தடுத்து நிறுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ‘டேசர்’ கருவியை அதிகாரிகள் பயன்படுத்தியதாகவும் அது குறிப்பிட்டது.
அதன் பின்னர், பொதுமக்களுக்குத் தொல்லை தந்ததற்காகவும் பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததற்காகவும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் சாங்கி பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

