தெம்பனிசில் உள்ள உணவுக் கடை ஒன்றில் வியாழக்கிழமை (ஜூன் 15) 57 வயது ஆடவரைக் கத்தியால் குத்திய 56 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
புளோக் 513 தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் பிற்பகல் 12.40 மணியளவில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.
யூ-டேஸ்ட் உணவகத்தில் கோழிச்சோறு விற்கும் திரு ஸ்கை வூ, 43, நண்பகல் வாக்கில் காப்பி குடித்துக்கொண்டு இருந்த ஆடவர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
"அவர்கள் இருவரும் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் திட்டத் தொடங்கினர்.
"அவர்களில் ஒருவர் தமது பையிலிருந்து மடக்குக் கத்தியை எடுத்து மற்றோர் ஆடவரிடம் காட்டினார்," என்று திரு வூ சொன்னார்.
கத்தியை வைத்திருந்த ஆடவர், மற்றோர் ஆடவரைக் கீழே தள்ளிவிட்டு அவரைப் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.
"பாதிக்கப்பட்டவர் எழுந்து நின்று, அந்த ஆடவரை அடிக்க அங்கிருந்த நாற்காலியை எடுத்தார். ஆனால், அவர் தடுமாறினார்," என்றும் திரு வூ கூறினார்.
பாதிக்கப்பட்டவர் கழுத்திலும் கையிலும் பலமுறை தாக்கப்பட்டதாக திரு வூ சொன்னார். காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர் என்று திரு வூ சத்தமிட்ட பிறகு சந்தேக ஆடவர் அங்கிருந்து தப்பியோடினார்.
பாதிக்கப்பட்டவர் தரையில் அமர்ந்து, பின்னர் தரையில் சாய்ந்துவிட்டார். ரத்தக் களறியுடன் காணப்பட்ட அவரைச் சுற்றி மக்கள் கூடினர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த ஆடவர் பாதியளவு சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
இந்நிலையில், சந்தேக ஆடவர் இதுபோன்ற தகராற்றில் ஈடுபட்டிருப்பது இது முதன்முறை அல்ல என்று திரு வூ சொன்னார். கடந்த மார்ச் மாதம் இதே உணவகத்தில் மற்றோர் ஆடவருடன் அவர் அடிதடியில் ஈடுபட்டதாக திரு வூ கூறினார்.

