தோ பாயோவில் ஆபாசச் செயலில் ஈடுபட்ட நபர் கைது

தோ பாயோவில் ஆபாசச் செயலில் ஈடுபட்ட நபர் கைது

1 mins read
c41fa82a-f0ce-4ba4-996e-c9407fec2503
கைது செய்யப்படும்போது, ​​36 வயதான அந்த நபர், அதிகாரி ஒருவரின் முகத்தில் குத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது. - படங்கள்: கீ வி ஷாங் டிக்டாக்

தோ பாயோவில் ஆபாசச் செயலில் ஈடுபட்டதற்காகவும், ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தில் குத்தியதற்காகவும் ஒருவர் ஜுன் 28ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.

ஊடகங்களுக்கு அளித்த பதிலில், அன்று காலை சுமார் 9.45 மணியளவில், தோ பாயோ சென்ட்ரல், புளாக் 184ல் உள்ள ஒரு காப்பி கடையில் ஒருவர் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததாகத் தங்களுக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.

கைது செய்யப்படும்போது, ​​36 வயதான அந்த நபர், அதிகாரி ஒருவரின் முகத்தில் குத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.

கீ வீ ஷாங் என்ற டிக்டாக் பயனர் இணையத்தில் பதிவிட்ட சம்பவத்தின் காணொளியில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் வெறுங்காலுடன் இருந்த அந்த நபரைத் தரையில் பிடித்து வைத்திருப்பது தெரிகிறது.

அதே பயனரின் மற்றொரு காணொளியில், மூன்றாவது காவல்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் இருப்பது தெரிகிறது. பின்னர், கைவிலங்கிடப்பட்ட அந்த நபர் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவது காணப்படுகிறது.

அறுவறுப்பான செயலில் ஈடுபட்டதற்காகவும், அரசு ஊழியர் ஒருவரை அவரது கடமையிலிருந்து தடுக்கும் நோக்கில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காகவும் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

19 வயதான அந்த காவல்துறை அதிகாரிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைதாக்குதல்டிக்டாக்