மூதாட்டியின் கைப்பையைப் பறிக்க முயன்ற ஆடவர் கைது

மூதாட்டியின் கைப்பையைப் பறிக்க முயன்ற ஆடவர் கைது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jul 2026 - 7:36 pm

1 mins read

பாலஸ்டியர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த 72 வயது மூதாட்டியின் கைப்பையைப் பறிக்க முயன்ற 64 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஜூலை 16ஆம் தேதி இரவு 8:40 மணிவாக்கில் அந்த வழிப்பறி முயற்சி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்மணி பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அவரின் கைப்பையைப் பறிக்க முயன்றது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆடவரின் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் சம்பவ இடத்திலிருந்து அவர் தப்பியோடினார்.

அதன் பின்னர், காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்து, ஜூலை 18ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.

வழிப்பறி குற்றத்திற்காக அந்த ஆடவர்மீது ஜூலை 20ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் அமைதியாகக் குற்றவாளியின் உடல் தோற்றம், அடையாளங்களைக் கவனித்து விரைவாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
குற்றம்திருட்டுகைது