சிகரெட் கடத்த முயன்ற ஆடவர் துவாஸ் சோதனைச்சாவடியில் கைது

1 mins read
150 பெட்டிகளைத் துவாஸ் சோதனைச்சாவடி வழியாகக் கடத்த முயன்றார்
b4e427b4-140b-4824-a8b0-0d49f8c47acb
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றில் வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. - படங்கள்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 30 வயது ஆடவரைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கைது செய்துள்ளது.

அந்த ஆடவர், 150 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் மறைத்துக் கொண்டுவர முயன்றார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் அவர் பிடிபட்டார்.

லாரியைக் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தியபோது அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 5) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு, கூடுதல் விசாரணைக்காகச் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, வைத்திருப்பது, விநியோகம் செய்வது போன்றவை சிங்கப்பூரில் கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏய்க்கப்பட்ட வரித்தொகையைப் போன்று அதிகபட்சம் 40 மடங்கு அபராதமோ ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இத்தகைய குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் வரிசெலுத்தப்படாத பொருள்களின் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்