முன்னாள் காதலியைப் பழிவாங்க உயிருடன் புதைத்த ஆடவர்

முன்னாள் காதலியைப் பழிவாங்க உயிருடன் புதைத்த ஆடவர்

2 mins read
3f68103e-a9ef-4e2c-a5ea-912b472f4eb3
இருபத்தொரு வயது தரிக்ஜோத் சிங், தன்னை நிராகரித்த முன்னாள் காதலியை உயிருடன் புதைத்து கொலை செய்ததாகத் தென் ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விவரிக்கப்பட்டது.  - படம்: தமிழ் முரசு

இருபத்தொரு வயது தரிக்ஜோத் சிங், தன்னை நிராகரித்த முன்னாள் காதலியை உயிருடன் புதைத்து கொலை செய்ததாகத் தென் ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விவரிக்கப்பட்டது. 

தாதியர் துறை மாணவியான 21 வயது ஜாஸ்மீன் கோர், அடிலேய்ட் புறநகர்ப் பகுதியிலிருந்த முதியோர் இல்லத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். 2021 மார்ச் மாதம், ஜாஸ்மீன் கோர் வேலையிடத்திலிருந்து கடத்தப்பட்டு, சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலிருந்த மொரலானா க்ரீக்கில் குழி தோண்டி புதைக்கப்பட்டார். கைகளும் பாதங்களும் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜாஸ்மீன் கோர் புதைக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

“அவர் உயிருடன் மூச்சுவிட்டு, மண்ணை விழுங்கினார். உணவுக்குழாயின் அடிப்பகுதி வரை (மண்) சென்றிருந்தது,” என்றார் அவர். 

இந்தக் கொலையை சிங் திட்டமிட்டுச் செய்ததாகவும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. 

கடத்தலுக்கு முன்தினம், அடிலேய்ட் நகரிலிருந்த கண்காணிப்புப் புகைப்படக் கருவிகளின் அமைவிட வரைபடத்தை சிங் பதிவிறக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் மண்வெட்டியும் இணைப்பு வடங்களும் வாங்கினார். 

மார்ச் 5ம் தேதி, சக குடியிருப்பாளரின் வாகனத்தைப் பயன்படுத்தி ஜாஸ்மீன் கோரை அவர் கடத்தினார். அதே நாள் இரவு ஜாஸ்மீன் கோர் புதைக்கப்பட்டார். 

ஜாஸ்மீன் கோர் காணாமல் போன பிறகு, காவல்துறையினர் சிங்கை விசாரித்தனர். ஆரம்பத்தில் எதுவும் தெரியாதென்று கூறிய அவர், ஜாஸ்மீன் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரைப் புதைத்து அடக்கம் செய்ததாகவும் கதையை மாற்றிக் கூறினார். 

ஜாஸ்மீன் கோர் தன்னை விட்டுப் பிரிந்ததால் சிங் மனமுடைந்து போனதாக அவரது வழக்கறிஞர் கூறினார். 

பிப்ரவரி மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங், கட்டாய ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார். தண்டனைக்காலம் ஆகஸ்ட் மாதம் தீர்மானிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்