தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்பாஸ் கணக்குகளை அணுக மோசடிக் கும்பலுக்கு உதவியவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
0386324c-7f99-4eb7-a79f-fb4464a1ccac
ஒரு சிங்பாஸ் சந்தேகத்திற்குரிய மோசடி வருமானங்களில் $1 மில்லியனுக்கும் அதிகமாக ஈட்ட பயன்படுத்தப்பட்டது. - படம்: சாவ்பாவ்

போலி வேலை விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் சிங்பாஸ் கணக்குகளை அணுக உதவிய 26 வயது ஆடவர் மீது பிப்ரவரி 10ஆம் தேதி குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி அனுப்பும் தளமான டெலிகிராமில் வெளியிடப்பட்ட மோசடி வேலை விளம்பரங்கள் மூலம் கணக்குகள் பெறப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

அவற்றில் ஒரு கணக்கு வணிகத்தைப் பதிவு செய்யவும் பெருநிறுவன வங்கிக் கணக்கைத் திறக்கவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது சந்தேகத்திற்குரிய மோசடி வருமானங்களில் $1 மில்லியனுக்கும் அதிகமாக ஈட்ட பயன்படுத்தப்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வங்கிக் கணக்குகளை அனுமதியின்றி பயன்படுத்தத் தூண்டியது, மோசடிக்கு சிங்பாஸ் விவரங்களைப் பெற்றது ஆகியவை அடங்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் வங்கிக் கணக்குகளைத் திரட்டுவதற்கு மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாக நம்பப்படுகிறது.

இரு கைப்பேசிகளும் இரு தானியக்க வங்கி அட்டைகளும் (ஏடிஎம்) கைப்பற்றப்பட்டன.

வங்கி கணினிக் கட்டமைப்பை அனுமதியின்றி அணுக உதவிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு $5,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மற்றொருவரின் விவரங்களை எடுத்த குற்றத்திற்கு மூன்றாண்டுகள் வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிச் சம்பவங்கள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டின. பதிவான 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதிக்கான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தக் குற்றங்களைத் தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் மோசடிகளில் ஈடுபடும் தனிமனிதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் காவல்துறை எச்சரித்து இருக்கிறது. சிங்பாஸ் அல்லது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கு பணம் வழங்கப்படும் மோசடிகளுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்படுவோர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்.

மோசடிகள் குறித்த மேல் விவரங்களுக்கு, www.scamshield.gov.sg என்ற இணையத்தளத்தை நாடவும் அல்லது 1799 என்ற எண்ணில் மோசடிக்கான உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும். மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட எவரும் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறை நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையப் பக்கத்தில் தகவல் சமர்ப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்