பிரபல மலேசிய நடிகர் சிங்கப்பூர் எக்ஸ்போவில் தாக்கப்பட்டார்

2 mins read
2240c2d0-e1d0-4578-9673-376a24960794
திரு கமால் அட்லிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. காயங்களுக்குத் தையல்கள் போடப்பட்டன. தமது கணவர் தாக்கப்பட்டதை திருவாட்டி உகாஷா (இடது) நேரில் கண்டு அதிர்ந்து கதறி அழுதார். மருத்துவமனையில் தமது கணவருடன் அவர் பக்கத்திலேயே இருந்தார். தாக்குதல் நடத்திய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். படங்கள்: ரோஸ்லான் ஷா, காவல்துறை -

பிரபல மலேசிய நடிகர் கமால் அட்லி, 36, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) இரவு சிங்கப்பூர் எக்ஸ்போவில் தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.19 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

தடி ஒன்றைப் பயன்படுத்தி திரு கமாலை அந்த ஆடவர் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. திரு கமாலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.

திரு கமால் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவரின் காயங்களுக்குத் தையல்கள் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் தடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அது ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் 5A-யில் நோன்புப் பெருநாள் மாபெரும் விற்பனை மூன்று நாள்களுக்கு நடைபெற்றது. நிகழ்வின் இறுதி நாளில் திரு கமாலும் அவரது மனைவியும் நடிகையுமான உகாஷா சென்ரோஸ் கலந்துகொண்டு ரசிகர்களைச் சந்தித்தனர்.

திரு கமால் தமது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உடலில் பல பகுதிகளில் பச்சை குத்தியிருந்த ஆடவர் ஒருவர் அவரை அணுகியதாக திருவாட்டி உகாஷா தம்மிடம் தெரிவித்ததாக நிகழ்வுக்கு அந்தத் தம்பதியரை அழைத்திருந்த திரு ரோஸ்லான் ஷா கூறினார்.

அந்த ஆடவர் தடி ஒன்றைப் பயன்படுத்தி தமது கணவரின் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் விழுந்ததாகவும் விழுந்தபோது அவரது முகம் மேசை மீது மோதியதாகவும் திருவாட்டி உகாஷா கூறியதாக திரு ரோஸ்லாம் ஷா தெரிவித்தார்.

திரு கமால் நிலைகுலைந்து கீழே விழுந்ததும் அந்த ஆடவர், கமாலைத் தொடர்ந்து பலமுறை தடியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. தரையில் நிறைய ரத்தத் திட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.