தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைது செய்ய வந்த காவல்துறையினரிடம் மூர்க்கமாக நடந்து, கடிக்க முயன்ற ஆடவர்

2 mins read
1d8a31eb-ab61-4f05-8187-27f033f9faea
கைது செய்ய முற்பட்ட அதிகாரிகளைத் தள்ளிவிட்டு கடிக்க ஆடவர் முயன்றதாகக் கூறப்படுகிறது. - படம்: ஷின்மின் வாசகர்

போதைப்பொருள் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது ஆடவர் சனிக்கிழமை (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டார்.

ஊபி அவென்யூ 3ல் ஆடவர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்டிருந்ததாக சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது, அந்த ஆடவர் தமது காருக்குப் பக்கத்தில் சாலையில் அமர்ந்திருந்தார்.

காவல்துறை அதிகாரிகளிடம் அந்த ஆடவர் தமது உண்மையான அடையாளத்தைத் வெளிப்படுத்தவில்லை. மாறாக, அதுகுறித்து அவர் பொய் கூறினார்.

அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருளுடன், போதைப்பொருள் தொடர்பான சாதனம், மின்சிகரெட், வங்கி அட்டை ஆகியவற்றை கண்டெடுத்தனர்.

அந்த வங்கி அட்டை அவருடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டபோது அந்த ஆடவர் அவர்களிடம் மூர்க்கமாக நடந்துகொண்டார்.

அந்த ஆடவர் அதிகாரிகளைத் தள்ளி அவர்களைக் கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ஆடவர் சட்டை அணியாமல் இருந்ததையும் நாய் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்ததையும் ஷின்மின் நாளிதழ் வாசகர் எடுத்த படங்கள் காட்டின.

அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்ய அவரை நோக்கிச் சென்றபோது அவர் மூர்க்கமாக நடந்துகொண்டதால் அவரை பலவந்தமாகப் பிடித்துக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.

அரசாங்க ஊழியரைத் தாக்கியதற்காகவும் பொய்த் தகவல் அளித்ததற்காகவும் பிறருக்குச் சொந்தமான பொருளைச் சட்டவிரோதமாக வைத்திருந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்திலும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடமும் மின்சிகரெட் தொடர்பான வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்