சிங்கப்பூரின் மிகப் பெரிய வாடகை மோசடிகளில் ஒன்றுக்குக் காரணமான ஆடவர் ஒருவருக்கு மூவாண்டுகள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் மற்றவர்களைத் தொடர்ந்து ஏமாற்றினார்.
கிப்சன் ஸெங் சியான்ஃபூ, 29, என்ற அந்த ஆடவர் சிங்கப்பூர் உட்பட, குறைந்தது 12 நாடுகளைச் சேர்ந்த 68 பேரை மொத்தம் $383,000 ஏமாற்றினார்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள ஸெங், முன்னதாக ஏமாற்றியது தொடர்பான 23 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மேலும் 39 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிங்கப்பூர் வீடமைப்பு நிறுவனத்தில் ஸெங் விற்பனை நிர்வாகியாக வேலைபார்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாடகை வீடுகளைப் படமெடுப்பதும், வாடிக்கையாளர்கள் வீடுகளைக் காண்பதற்கு ஏற்பாடு செய்வதுமே அவரது பணிகளாக இருந்தன.
அந்த வேலையை விட்டுச் சென்ற பிறகு, முன்னர் எடுத்த படங்களை ஸெங் ‘ஏர்பிஎன்பி’ தளத்தில் பதிவேற்றம் செய்தார். ஆனால், அப்போது அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் பொய்யான வாடகை ஒப்பந்தங்களையும் தயாரித்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி, பிரான்சைச் சேர்ந்த மூவர் சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஸெங்கிடம் $9,600 முன்பணம் செலுத்தினர். பிப்ரவரி 5ஆம் தேதி அவர்கள் அவ்வீட்டில் குடியேறத் திட்டமிட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அன்று அவர்கள், வீட்டுக்குள் செல்ல முடியாது என்று ஸெங் கூறினார். அவ்வீட்டில் முன்னர் குடியிருந்தவருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதே அதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.
வீட்டில் குடியேற அவர் மற்றொரு தேதியைக் கொடுத்திருந்தார். இருப்பினும், அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.
ஸெங் முதலில் 2022 பிப்ரவரி 10ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அதே நாளன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து பல பேரை ஏமாற்றினார்.
மீண்டும் 2022ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அவர் ஒரு வாரத்திற்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டபோது மேலும் ஆறு பேரை அவர் ஏமாற்றினார். 2022 அக்டோபர் 5ஆம் தேதி அவரது பிணை ரத்துசெய்யப்பட்டது. அப்போதிலிருந்து அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், உள்ளூர்வாசிகள் போன்றோர் ஏமாற்றப்பட்டோரில் அடங்குவர்.

