இரவு நேரம் மது அருந்திவிட்டு, வீடு புகுந்து திருடவும் உறங்கிக்கொண்டிருந்த மாதைப் பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்ற ஆடவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
துப்புரவாளராகப் பணிபுரிந்த ஆண்ட்ரூ குமாரவேல் ஒரு மலேசியர். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, 21 வயதாக இருந்தபோது அவர் இக்குற்றங்களைச் செய்தார்.
கம்பி வேலியைத் தாண்டி இரண்டு மாடி வீட்டிற்குள் நுழையும் முயற்சியில் அவர் கையைக் கிழித்துக்கொண்டதாகவும் தாழிடப்படாத சன்னல் வழியாக நுழைந்து பணம் கிடைக்கிறதா என்று தேடியதாகவும் கூறப்பட்டது.
பின்னர் படுக்கையறைக்குச் சென்ற அவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த 58 வயது மாதைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
மாது எழுந்து சத்தமிட்டதால் அங்கிருந்து தப்பித்த ஆடவர், அதேநாளில் கைது செய்யப்பட்டார்.
வீடு புகுந்து திருட முயன்றது, மாதைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் இச்சம்பவத்தில் தொடர்பில்லாத ஆபாசப் படம் தொடர்பான குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் 16ஆம் தேதி, தற்போது 23 வயதான குமாரவேலுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கும்போது, 58 வயது மாதுக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த மலேசிய மாது குளிக்கும்போது படமெடுக்க முயன்றதன் தொடர்பில் குமாரவேலு கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர் தமது வேலையிடத்துக்கு அருகிலிருந்த வீட்டில் திருடவும் பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றதாகக் கூறப்பட்டது.

