சிறாரை ஆபாசமாகச் சித்திரிக்கும் காணொளிகளை வைத்திருந்த குற்றத்திற்காக 31 வயது டான் வெய் டிங்கிற்குப் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) ஓராண்டு, 11 மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அந்தக் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய அவர், தரவுப் பகிர்வுத்தளம் ஒன்றை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
அவரிடமிருந்து குறைந்தது 100க்கும் மேற்பட்ட சிறார் தொடர்புடைய ஆபாசக் காணொளிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
2020ஆம் ஆண்டுக்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தார்.
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் அக்காணொளிகளில் இருந்தனர் என்றும் அவர்களில் ஒருவர் உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது கொடுமைக்கு ஆளானவர் என்றும் அரசுத் தரப்பு கூறியது.
சிறார்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் காணொளிகளை வைத்திருந்ததன் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைச் சிங்கப்பூரரான டான் ஒப்புக்கொண்டார்.
அவர் புதன்கிழமை $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். டான், இம்மாதம் 25ஆம் தேதி முதல் சிறைத்தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.