சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்களைக் கடத்தி வர முயற்சி செய்த 39 வயது ஆடவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
டிசம்பர் 22ஆம் தேதி மாலை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த ஆடவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 3 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1.7 கிலோகிராம் ‘ஐஸ்’ வகைப் போதைப்பொருள் இருந்தன.
சிங்கப்பூருக்குள் 250 கிராமுக்கு மேல் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளைக் கொண்டுவந்தாலோ அல்லது ஏற்றுமதி செய்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல் 500 கிராம் கஞ்சாவுக்கு மேல் நாட்டிற்குள் கொண்டு வந்தாலோ அல்லது ஏற்றுமதி செய்தாலோ மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கைது நடவடிக்கை தொடர்பாக மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) கூட்டறிக்கை வெளியிட்டன.
கைது செய்யப்பட்ட ஆடவர் மலேசியர் என்றும் தங்களுக்குக் கடத்தல் குறித்துத் துப்பு கிடைத்ததையடுத்து சோதனை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள்களை ஏழு பொட்டலங்களில் அந்த ஆடவர் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் 3,272 கிராம் கஞ்சா மற்றும் 1,709 கிராம் ‘ஐஸ்’ மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
“பிடிபட்ட போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு 237,000 வெள்ளிக்கு மேல். அவற்றை 1,440 போதைப் புழங்கிகள் 1 வாரம் பயன்படுத்தப் போதுமானது,” என்று அதிகாரிகள் கூறினர்.
விசாரணை தொடர்கிறது.

