உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மூத்த ஆடவர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்தக் கைகலப்பில் மூத்த ஆடவர் உயிரிழந்தார்.
57 வயது டியோ இங் சாய்க்கும் 73 வயது திரு ஃபூ சுவான் சியூக்கும் இடையே உட்லண்ட்ஸ் அவென்யூ 6, புளோக் 768இல் உள்ள ‘ஃபோர்க் அண்ட் ஸ்பூன்’ உணவுக் கடையில் இம்மாதம் 21ஆம் தேதி வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
அதில் டியோ தாக்கியதில் திரு ஃபூவின் குரல்வளையில் முறிவு ஏற்பட்டு பின்னர் அவர் மாண்டார்.
திரு ஃபூவிற்குப் பலத்த காயம் ஏற்படும் அளவிற்கு டியோ எவ்வாறு தாக்கினார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
இரவு சுமார் 9.20 மணிக்கு கடையில் நடந்த சம்பவம் குறித்து உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் சுயநினைவின்றி காணப்பட்ட திரு ஃபூ மருத்துவமனையில் பின் மாண்டது உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து டியோவை உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கும்படி உத்தரவிட்டது. இம்மாதம் 30ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
எனினும் டியோவின் வயது 50க்கு மேல் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

