பறக்கும் விமானத்தில் பெண் சிப்பந்தி மானபங்கம்; ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
4ad58073-e7b0-466c-858e-4dc0dda9a0be
ஏப்ரலில் பறக்கும் விமானத்தில் இரண்டாவது சம்பவமாக பெண் சிப்பந்தி மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பறந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் சிப்பந்தியை மானபங்கப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் மீது செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரஜத் என்று மட்டும் குறிப்பிடப்படும் இந்திய நாட்டவரான அவர், பிப்ரவரி 28ஆம் தேதி காலை 11.20 மணியளவில் அத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் விமானம் எங்கிருந்து புறப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியான காவல் துறை அறிக்கையில், சம்பவத்தன்று 28 வயது பெண் சிப்பந்தி ஒருவர், பெண் பயணிக்கு உதவியாக கழிவறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அப்போது கீழே இருந்த தாளை பெண் சிப்பந்தி குனிந்து எடுக்க முயற்சி செய்தபோது பின்பக்கத்தில் வந்த ஆடவர், பெண் சிப்பந்தியைப் பிடித்து தன்னுடன் கழிவறைக்குள் தள்ளியதாக காவல்துறை தெரிவிக்கிறது. இதனை நேரில் பார்த்த பெண் பயணி, கழிவறையிலிருந்து அவர் வெளியே வர உதவினார். பின்னர் இந்தச் சம்பவம் மேலதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய காவல் அதிகாரிகள் ஆடவரை கைது செய்தனர்.

மே 14ஆம் தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் விமானத்தில் மானபங்கக் குற்றச்செயல் இடம்பெற்றிருப்பது பற்றிய அறிவிப்புகள் ஏப்ரல் மாதத்தில் காவல் துறையால் வெளியிடப்படுவது இது இரண்டாவது முறை.

இம்மாதம் 2ஆம் தேதி ஓய்வு பெற்றவரும் இந்திய நாட்டவருமான பாலசுப்பிரமணியம் ரமேஷ், 73, பெண் சிப்பந்தியை நான்கு முறை மானபங்கம் செய்ததற்காக அவருக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்