எஸ்எம்ஆர்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர், முதுகுப் பையைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியபோது அதற்கு ஒத்துழைக்காமல் அவரைத் தள்ளிவிட்டதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த 65 வயது பெண் ஊழியர் பின்பக்கமாக விழுந்தததில் தலையில் காயம் ஏற்பட்டது.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) 30 வயது அலினா மெரிடியன் மீது மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இம்மாதம் 17ஆம் தேதி காலை 8.00 மணியளவில் அவர் லோரோங் சுவான் எம்ஆர்டி நிலையத்துக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரி, முதுகுப் பையைச் சோதனையிட வேண்டும் என்று ஆடவரிடம் கூறியுள்ளார்.
இதற்கு ஒத்துழைக்காமல் பாதுகாப்பு அதிகாரியை நோக்கி அவர் கத்தினார் என்று காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது அவர், பெண் ஊழியரின் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டார். இதனால் ஊழியர் பின்பக்கமாக விழுந்தார். சுயநினைவுடன் ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு ஐந்து நாள் மருத்துவ விடுப்பு தரப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
இதையடுத்து காவல்துறை கேமரா மற்றும் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த அங் மோ கியோ காவல்துறையினர் ஆடவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 19ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.