உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள பாலர் பள்ளிக்கு வெளியே நான்கு வயது சிறுவனைக் கன்னத்தில் அறைந்ததாக நம்பப்படும் 36 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்படும்.
மார்ச் 6ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் சிறுவன் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையிடமிருந்து புகார் வந்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்தது.
ஆடவர் அறைந்ததில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உட்லண்ட்சில் உள்ள பாலர் பள்ளிக்கு வெளியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் ஆடவர் அந்தச் சிறுவனை அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
உட்லண்ட்ஸ் காவல் நிலைய அதிகாரிகள் ஆடவரை அடையாளங்கண்டதை அடுத்து சம்பவம் நடந்த அதே நாளில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
பிசிஎஃப் ஸ்பார்கல்டோட்ஸ் பாலர் பள்ளிக்கு வெளியே பிற்பகல்வாக்கில் ஆடவர் தமது பிள்ளையை அறைந்ததாகக் கூறி சிறுவனின் தாய் ஃபாயிசா ஹமிட் மார்ச் 6ஆம் தேதி இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
தமது வீட்டுப் பணிப்பெண் நடந்ததாகக் கூறிய சம்பவத்தைத் திருவாட்டி ஃபாயிசா பதிவில் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஓடிப் பிடித்து விளையாடியபோது வகுப்பறையில் உள்ள சக மாணவரிடம் தமது மகன் நடு விரலைக் காட்டியதாகப் பணிப்பெண் கூறியதாகத் திருவாட்டி ஃபாயிசா சொன்னார்.
அதையடுத்து தமது மகனின் வகுப்பறையில் உள்ள சக மாணவரின் தந்தை, தமது மகனின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் அறைந்ததாகத் திருவாட்டி ஃபாயிசா குறிப்பிட்டார்.
ஆடவரைத் தடுக்க முயன்ற இல்லப் பணிப்பெண்ணைத் தள்ளிவிட்டு சிறுவனின் மறு கன்னத்திலும் ஆடவர் அறைந்ததாகக் கூறிய திருவாட்டி ஃபாயிசா, தமது மகன் அப்போது அழத் தொடங்கியதைச் சுட்டினார்.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது, அடுத்தவரைத் தாக்கியது, வேண்டுமென்றே சிறுவனைத் துன்புறுத்தியது ஆகிய குற்றங்கள் ஆடவர்மீது சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டுவரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

