கேலாங் சண்டையில் கடும் காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
2da19cf8-14ea-4f75-a77b-8d52cdc58525
முதியவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர்மீது ஆகஸ்ட் 22ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  - படம்: பிக்சாபே

கேலாங் சந்து ஒன்றில் முதியவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் மீது ஆகஸ்ட் 22ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த முதியவர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

67 வயது சிவராஜு பிச்சை பிள்ளைக்குக் கடும் காயம் ஏற்படுத்தியதாக 40 வயது ஸுபிர் முகம்மது மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தச் சண்டை, எண் 669 கேலாங் ரோட்டின் பின்பக்கச் சந்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிவாக்கில் நடந்ததாகக் குற்றப் பத்திரிகை தெரிவித்தது.

ஸுபிர், திரு சிவராஜூவைத் தரையில் தள்ளி அவரின் முகத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. திரு சிவராஜூக்குத் தலையில் காயங்கள் ஏற்பட்டன.

அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 19ஆம் தேதி உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

அந்த இரண்டு ஆடவர்களுக்கும் இடையிலான உறவு, அவர்கள் சண்டையிட்ட காரணம் ஆகியவற்றைப் பற்றி நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

ஸுபிர் தடுப்புக்காவலில் வைக்கப்படவேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது. அதோடு, ஆதாரம் திரட்டுவதற்கு அவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச்செல்ல அது அனுமதியும் கேட்டுக்கொண்டது.

ஸுபிர் மீது திருட்டுக்காக நான்கு குற்றச்சாட்டுகளும், நம்பிக்கை மோசடிக்காக ஒரு குற்றச்சாட்டும் ஆகஸ்ட் 8ஆம் தேதி சுமத்தப்பட்டன.

அவர் ஜூன் 12ஆம் தேதி பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல், புளோக் 545ன் கீழ்த்தளத்திலிருந்து கறுப்பு மிதிவண்டியையும் பூட்டு ஒன்றையும் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதோடு, ஜூன் 19ஆம் தேதி மொத்தம் $490 மதிப்புள்ள கைக்கடிகாரத்தையும் மோதிரத்தையும் அவர் கையாடியதாகக் கூறப்படுகிறது.

ஜூலையில், அல்-அன்சார் பள்ளிவாசலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து விலைமதிப்பான பொருள்களை ஸுபிர் திருடியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் ஆகஸ்ட் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

குறிப்புச் சொற்கள்