காலாங் வட்டார விபத்து தொடர்பில் ஆடவர்மீது குற்றச்சாட்டு

காலாங் வட்டார விபத்து தொடர்பில் ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
5bda31c5-b327-4ad0-b650-afb58bebdb65
காலாங் பாருவில் ஆபத்தான வகையில் காரை ஓட்டிய முகம்மது ஃபிர்டாவுஸ் முகமது அக்ராம்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. - படம்: ரோட்ஸ்.எஸ்ஜி/ஃபேஸ்புக்

காலாங் வட்டாரத்தில் ஆபத்தான வகையில் காரை ஓட்டியதாகக் கூறப்படும் ஆடவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆபத்தான முறையில் காரை ஓட்டி இருவருக்குக் காயம் ஏற்படுத்தியது, பிரிவு 3 ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை 36 வயது முகம்மது ஃபிர்டாவுஸ் முகம்மது அக்ராம் எதிர்நோக்குகிறார்.

இம்மாதம் 17ஆம் தேதி காலை 8 மணியளவில் மெத்தம்ஃபெட்டமின் அல்லது ஐஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருளை உட்கொண்டபின் காலாங் பாரு பகுதியில் ஃபிர்டாவுஸ் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், டாக்சி ஒன்றின்மீது மோதியதில் அதிலிருந்த 60 வயது ஓட்டுநரும் 43 வயது பயணியும் காயமடைந்தனர்.

டாக்சி ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் பயணிக்கு முதுகெலும்பின் இறுதிப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

விபத்தை அடுத்து காரை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து ஃபிர்டாவுஸ் தப்பியோடியதாகக் காவல்துறை ஜூன் 18ஆம் தேதி தெரிவித்தது.

மேலும், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள்கள், போதைப்பொருள் தொடர்பான பிற பொருள்கள், மின்சிகரெட்டுகள், கையில் அணியக்கூடிய நக்கல்டஸ்டர் என்ற ஆயுதம் ஆகியவை ஃபிர்டாவுசின் காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கப்பட்ட ஐந்து மணிநேரத்துக்குள் ஃபிர்டாவுசை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

காவல்துறை அதிகாரிகள் அவரை எங்குப் பிடித்தனர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

எனினும், மரின் பரேட் சாலையில் உள்ள வில்லேஜ் காத்தோங் ஹோட்டலில் ஜூன் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணிவாக்கில் ஃபிர்டாவுசிடம் இரண்டு கத்திகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக நம்பப்படுகிறது.

ஆடவரின் வழக்கு ஜூலை 17ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

போதைப்பொருள் உட்கொண்டபின் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஓராண்டுவரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி அடுத்தவர்களுக்குக் காயம் விளைவிப்போருக்கு அதிகபட்சம் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $2,000லிருந்து $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்