காவல்துறை வாகனத்தைச் சேதப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

காவல்துறை வாகனத்தைச் சேதப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Apr 2026 - 7:44 pm

1 mins read

காவல்துறை வாகனத்தைச் சேதப்படுத்தியதாக 53 வயது ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட இருக்கிறது.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இரவு 7.40 மணியளவில், புளோக் 83 ரெட்ஹில் குளோஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த நாசவேலை குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை ஆடவர் ஒருவர் ஏதோவொரு பொருளைக் கொண்டு கீறியதாகப் பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்திருந்தார். காவல்துறை சம்பவ இடத்துக்குச் செல்லுமுன்பே அந்த ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதையடுத்து, கிளமெண்டி காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 4) அந்த ஆடவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த ஆடவர், நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தைக் கண்டதும், தனது சாவியைக் கொண்டு வாகனத்தின் கதவுகளைக் கீறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை வாகனத்தைச் சேதப்படுத்தியதாக அவர் மீது திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 6) குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் மூன்று முதல் எட்டுப் பிரம்படிகள் வரையிலும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைசேதம்குற்றச்சாட்டுவாகனம்