எல்லை தாண்டிய முதலீட்டு மோசடிக் கும்பலுக்கு உதவியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

எல்லை தாண்டிய முதலீட்டு மோசடிக் கும்பலுக்கு உதவியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
ce55cdb0-4217-4070-b3ed-11fd2c8d58f6
சாங்கி விமான நிலையம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது முகம்மது கைருல் ஃபைசல் அஸ்லான் கைதானார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்வாசிகளைக் குறிவைத்து செயல்படும் எல்லை தாண்டிய முதலீட்டு மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆடவர் ஒருவர்மீது திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அரசு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த 41 வயது மலேசியரான முகம்மது கைருல் ஃபைசல் அஸ்லான், ஞாயிற்றுக்கிழமை சாங்கி விமான நிலையம் வழியாக சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது கைதுசெய்யப்பட்டார்.

ஊழல், போதைப்பொருள் கடத்தல், பிற தீவிர குற்றங்கள் (பலன்களைப் பறிமுதல் செய்தல்) சட்டத்தின்கீழ் அவர்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மோசடிக் கும்பலுக்கு உடந்தை

கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 14 வரை, சிங்கப்பூரில் வசிப்பவர்களிடமிருந்து மோசடிக் கும்பலுக்காகப் பணத்தைப் பெற்று, அந்த எல்லை தாண்டிய கும்பலுக்கு உதவியதாக கைருல்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், பிப்ரவரி 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

கைருல் கைதான நாளில் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, முதலீட்டு மோசடி குறித்து பிப்ரவரி 7ஆம் தேதி காவல்துறைக்கு முதன்முதலில் புகார் கிடைத்தது.

பணம் இழந்த பெண்

புகாரளித்த பெண், ஃபேஸ்புக்கில் ஒரு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, பின்னர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர அழைக்கப்பட்டு அதில் இணைக்கப்பட்டார். முதலீடு செய்வதற்காக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அக்குழுவில் அவர் அறிவுறுத்தப்பட்டார்.

முன்பின் தெரியாத வங்கி, யூட்ரிப் கணக்குகளுக்கு $25,000 மாற்றிய பிறகு, அவருக்கு 8 விழுக்காடு லாபம் கிடைத்ததாக அந்தச் செயலி காட்டியது.

அதன்பின்னர், மேலும் $50,000 முதலீடு செய்தால் கூடுதலாக 20 விழுக்காடு லாபம் ஈட்டலாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டது.

அந்த முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறிக்கொண்ட கைருலிடம், அந்தப் பெண் $50,000 ரொக்கத்தை நேரில் ஒப்படைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபத்தைத் திரும்பப் பெற முடியாமல் போனபோதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்தார்.

கைருலிடம் சோதனை நடத்தியபோது, அவர் அடையாளம் தெரியாத நபர்களின் தூண்டுதலின் பேரில், மோசடிக்கு ஆளானவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மற்றவர்களிடம் ஒப்படைக்கும் வேலையைச் செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

“தெரியாதவர்களிடம் பணத்தை ஒப்படைப்பதிலோ அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்துகொள்வதிலோ பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்