கேபோட் கடத்தியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
d2d76f81-0eb6-4471-b8bb-9bd076683103
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 400க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் சிக்கின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாக 26 வயது சிங்கப்பூர் ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டியென் ஜியாசெங் என்ற ஆடவர்மீது செப்டம்பர் 12ஆம் தேதி போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்திய சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இம்மாதம் 1ஆம் தேதி மின்சிகரெட்டுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் நடப்புக்கு வந்ததை அடுத்து மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு முதல் அதிரடி சோதனையை இம்மாதம் 10ஆம் தேதி மேற்கொண்டது. அப்போது கைது செய்யப்பட்டோரில் டியெனும் ஒருவர்.

தெலுக் பிளாங்கா ரைஸ், ஹவ்காங், பூன் லே டிரைவ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது எட்டு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

எட்டோமிடேட் கலந்ததாக நம்பப்படும் 400க்கும் அதிகமான மின்சிகரெட் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மின்சிகரெட் தொடர்பான பல்வேறு பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

செப்டம்பர் 10ஆம் தேதி ஐந்து எட்டோமிடேட் கலந்த ஐந்து மின்சிகரெட்டுகளை வோங் ஜுன் சியாங் என்ற ஆடவரிடம் விற்றதன் மூலம் சி ரக கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளை டியென் கடத்த முயன்றதாக நீதிமன்ற ஆவணம் குறிப்பிட்டது.

முகமது நூ நூர்டின் என்ற மற்றோர் ஆடவரிடம் விற்பனைக்காக டியென் ஐந்து மின்சிகரெட் கருவிகளைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

டியெனுக்கு $20,000 பிணை வழங்கப்பட்டது. அக்டோபர் 13ஆம் தேதி விசாரணை முந்தைய கலந்துரையாடல் இடம்பெறும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், எட்டோமிடேட் கடத்தல்காரர்களுக்கு ஈராண்டிலிருந்து 10 ஆண்டுவரை சிறைத் தண்டனையுடன் இரண்டிலிருந்து ஐந்து பிரம்படிகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்