கேலாங்கில் முதியோரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

கேலாங்கில் முதியோரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
1b13fa81-bc87-42c9-9966-45bcb956abfd
கொலைச் சம்பவம் கேலாங் லோரோங் 16ல் நடந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேலாங்கில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் 70 வயது முதியவருடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, 48 வயது ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவர் திங்கட்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நெஞ்சுப் பகுதியில் குத்துக் காயங்கள் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

கேலாங் லோரோங் 16ல் நடந்த சண்டை குறித்து தங்களுக்குக் காலை 8.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அதிகாரிகள் சம்பவ இடத்தில் காயமடைந்திருந்த முதியவரைக் கண்டனர். சுயநினைவுடன் இருந்த 48 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அந்த இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படும். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

மார்ச் 9ஆம் தேதி, இருவரில் ஒருவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவரை ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டுசென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார்.

இதற்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டில் ஏழு கொலைச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டன.

பூன் லே வீட்டில் இளைய சகோதரரைக் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மற்றொரு சம்பவம் செங்காங் வீட்டில் நடந்தது. தாயாரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2024ஆம் ஆண்டில் இணையவழி அல்லாத குற்றச்செயல்களின் எண்ணிக்கை 19,969லிருந்து 2025ல் 20,857ஆக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்