தேசிய தினத்தன்று பாய லேபாரில் கொள்ளைக் குற்றம் புரிந்த ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அன்றைய தினம் முற்பகல் 11.55 மணியளவில் மற்றொரு ஆடவரிடம் இருந்து $140,000 ரொக்கத்துடன் காதுகளில் பயன்படுத்தப்படும் ‘ஏர்பாட்ஸ்’ மின்சாதனக் கருவியையும் கொள்ளையடித்ததாக 26 வயது நூர் நஜாட் பின் அல்வி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பாயா லேபாரில் உள்ள பிஎல்கியூ 3 என்ற அலுவலகக் கட்டடத்தில் சம்பவம் நடந்துள்ளது.
நஜாட் அக்குற்றத்தை மேலும் இருவருடன் சேர்ந்து செய்துள்ளார். அவருடன் முகம்மது ராஷின் ஷாலாம், முகம்மது சுல்ஃபர்ஹான் ஜசாலி ஆகிய இரு ஆடவர்கள் குற்றத்தில் துணை புரிந்துள்ளனர். அவர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட ஆடவரிடம் ரொக்கம், $180 மதிப்புள்ள மின்கருவி, $40 மதிப்புள்ள சட்டை ஆகியவற்றை திருடியுள்ளனர்.
அதோடு, உடைமைகளை இழந்த அந்த ஆடவரை மூவரும் வயிற்றில் உதைத்துக் காயப்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நஜாட்டுக்கு 20 ஆண்டு சிறையும் 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம். நஜாட் மீது சாலைப் போக்குவரத்து சட்டப்படி மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய குற்றமும் அடங்கும்.
குற்றத்தில் உடந்தையாக இருந்த மற்ற இருவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.


