நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்க அதிகாரிகள் இருவரைக் கடித்ததாக ஆடவர் ஒருவர் மீது அக்டோபர் 30ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
அரசாங்க ஊழியர்கள் கடமையாற்றுவதைத் தடுக்கும் நோக்குடன் வேண்டுமென்றே அவர்களுக்குக் காயம் விளைவித்ததாக 31 வயது பிராயன் சாங் யி சியன் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அந்த அதிகாரிகளை சாங் கடித்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
இச்சம்பவம் அக்டோபர் 29ஆம் தேதி பிற்பகல் 3.45 மணி அளவில் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள மூக்குக்கண்ணாடிக் கடையான 888 விஷுவல் ஆப்டிக்சுக்கு முன்னால் உள்ள பொது நடைபாதையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்க அதிகாரியான முகம்மது சிராட் அப்துல் கஃபூரின் தோள்பட்டையை சாங் கடித்ததாகவும் அவரது முகத்திலும் கழுத்திலும் பலமுறை குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்றோர் அதிகாரியான திரு ஹைருதீன் ஹசானின் வலது மணிக்கட்டையும் சாங் கடித்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையை நிறைவு செய்யும் நோக்குடன் இந்த வழக்கு நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர் கடமையாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவருக்குக் காயம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் சாங்கிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

