கத்தியைக் கொண்டு மாதிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்டவர்மீது குற்றச்சாட்டு

கத்தியைக் கொண்டு மாதிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்டவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
f184052e-f304-4c86-b72f-b1c241e5fc4f
இந்த கார் நிறுத்துமிடத்தில் அந்த ஆடவர் கொள்ளையடிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. படம்: ஷின் மின் -

தோ பாயோவில் உள்ள எச்டிபி ஹப் கார் நிறுத்துமிடத்தில் கத்தியைக் கொண்டு 48 வயது மாதிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்ட ஆடவர் மீது புதன்கிழமை (ஜனவரி 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

போயி யான் கிட், 57, காணொளி இணைப்பு வாயிலாக காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

இதுபோன்ற மற்ற குற்றங்களிலும் போயி சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உதவ ஒருவாரத்திற்கு மத்திய போலிஸ் பிரிவில் அவரைத் தடுத்துவைக்குமாறு அது கேட்டுக்கொண்டது.

கார் நிறுத்துமிடத்தில் பின்னாலில் இருந்து அந்த மாதை போயி அணுகினார். அந்த நேரத்தில் அந்த மாது அவரது வாகனத்திற்குப் பக்கத்தில் நின்றார். காருக்குள் ஏறுமாறு போயி அந்த மாதிடம் கூறினார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கத்தியைக் கொண்டு அந்த மாதை போயி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் அந்த மாது பணத்தை இழக்கவில்லை. அவரது வலக்கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது வயிற்றில் கீறல்களும் அவரது மேற்கையில் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தங்ளின் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்ததாக காவல்துறை கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, தம்மை மனநலக் கழகத்திற்குக் கொண்டு செல்லுமாறு போயி கேட்டுக்கொண்டார்.

போயியின் மனநலம் பற்றி விசாரணை அதிகாரி கவனத்துடன் இருப்பார் என்று மாவட்ட நீதிபதி டெரன்ஸ் டே கூறினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்க குற்றஞ்சாட்டப்பட்டவர் சரியான மனநிலையில் இருந்ததாக நீதிபதி சொன்னார்.

கொள்ளையடித்து அல்லது கொள்ளையடிக்க முற்பட்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக குற்றவாளிக்கு ஐந்து முதல் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.